ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் 22ல் பிரம்மோற்சவம்
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் பிரம்மோற்சவம், வரும் 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் 22ம் தேதி முதல், மே 1ம் தேதி வரை, ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவமும், அதைத் தொடர்ந்து வரும், மே 1ம் தேதி முதல், மே 11ம் தேதி வரை, ராமானுஜர் அவதார உற்சவமும் நடைபெற உள்ளது.முதல் பத்து நாள் பிரம்மோற்சவத்தில், ஆதிகேசவப் பெருமாள், தினமும், காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 24ம் தேதி கருட வாகனமும், 28ம் தேதி, ஆதிகேசவ பெருமாள் தேரோட்டமும் நடைபெறும். மே 1ம் தேதி முதல், ராமானுஜர் அவதார உற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், மே 9ம் தேதி காலை, திருத்தேரில் ராமானுஜர் எழுந்தருளி, வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.