சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம்; பாலாற்றிற்கு செல்லும் வரதர்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், வரும் வெள்ளிக்கிழமை இரவு, சித்ரா பவுர்ணமி அன்று நடவாவி உற்சவத்தை முன்னிட்டு பாலாற்றில் எழுந்தருளும் விழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி அன்று செவிலிமேடு அருகே உள்ள பாலாற்றில் வரதராஜ பெருமாள் எழுந்தருள்வார், அந்த திருவிழா, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.அதையொட்டி, வரும் வியாழக்கிழமை, இரவு 9:00 மணியளவில், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு அமுதபடி தெரு, வழியாக செவிலிமேடு, அப்துல்லாபுரம் துாசி, நத்தகொள்ளை, வாகை போன்ற கிராமங்களில் சுவாமி சுற்றி வந்து, வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியளவில் அய்யங்கார்குளம் சஞ்சீவராயர் கோவிலில் எழுந்தருள்வார். அங்கு திருமஞ்சனம் முடிந்த பின், அப்பகுதியில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருள்வார். அதை தொடர்ந்து, அன்று இரவு, 9:00 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டு பாலாற்றிற்கு வந்தடைவார். அங்கு, திருமஞ்சனம், பிரம்ம ஆராதனம் நடைபெறும். இத்திருவிழாவை காண, காஞ்சிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாலாற்றிற்கு வருவர். வெள்ளிக்கிழமை, இரவு, 1:00 மணியளவில் பாலாற்றில் இருந்து புறப்பட்டு, விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு சென்று, சனிக்கிழமை அதிகாலை, 4:00 மணியளவில், வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைவார்.அய்யங்கார் குளம் பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரை கிணறு அதாவது நடவாவி என்று அழைக்கப்படும் கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வது அப்பகுதியில் பெரிய விழாவாக இருந்து வருகிறது.
அந்த கிணற்றில் வியக்க தக்க வகையில் உள்ளே மண்டபங்கள் கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை சுற்றி பிரகாரம், சுவாமி எழுந்தருள்வதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது,மற்ற நாட்களில் அந்த கிணற்றில் உள் மண்டபம் தண்ணீரில் மூழ்கி இருக்கும் திருவிழாவிற்காக தண்ணீரை வெளியேற்றி மண்டபத்தை அப்பகுதிவாசிகள் சுத்தம் செய்வர்.மேலும், சித்திரை மாதம் என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும். தண்ணீர் இருக்கும் கிணற்றில் உள் பகுதியில் குளுமையாக இருக்கும் என்பதால் வெப்பத்தை தணிக்க அந்த நடவாவி கிணற்றில் இறங்கி ஓய்வு எடுத்து பின் பெருமாள் செல்வதாக கூறப்படுகிறது.