சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில், பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நவகிரகங்களில் புதன் பகவானுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கடம் புறப்பாடாகி, கோவில் விமானத்தை அடைந்தது. 10:15 மணிக்கு, வேதமந்திரங்கள் முழங்க, சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி, காளி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, திருக்கல்யாணமும், இரவு அகோரமூர்த்தி வீதி உலாவும் நடந்தது.