உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: இரு மாநில பக்தர்கள் பங்கேற்பர்!

கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: இரு மாநில பக்தர்கள் பங்கேற்பர்!

கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் நாளை (ஏப். 22) சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக-- கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். தமிழக  கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கண்ணகி கோவலுடன் வானுலகம் சென்ற நாளான சித்ராபவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். அதன்படி நாளை அதிகாலை 5 மணிக்கு பள்ளி உணர்த்தல், 6 மணிக்கு மேல் மலர் வழிபாடு, யாகபூஜை, மங்கலஇசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பிரசாதம் மற்றும் மணிமேகலையின் அமுதசுரபியில் உணவு வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து பால்குடம் எடுத்தல், மங்கலநாண் மற்றும் வளையல் வழங்கல், திருவிளக்கு வழிபாடு, பூமாரி விழா நடைபெறும். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கும்பம் இட்டு யாகபூஜை செய்யப்படும்.அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

போக்குவரத்து வசதி: நாளை அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்பம் மற்றும் கூடலுாரில் இருந்து பளியன்குடி வரை தமிழக அரசு சிறப்பு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மினிபஸ் வசதியும் உள்ளது. அங்கிருந்து 6.6 கி.மீ., தமிழக வனப்பகுதி வழியாக நடந்து சென்றால் கோயிலை அடைந்து விடலாம். இது தவிர குமுளியில் இருந்து கோயில் வரை உள்ள 14 கி.மீ., துாரத்திற்கு ஜீப் வசதி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமுளிக்கு பஸ் வசதியுள்ளது.

பிளாஷ்டிக் தடை: சுற்றுப்புறச் சூழல், வனவிலங்கு பாதுகாப்புக் கருதி பிளாஷ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் குடிநீர் கேன்களுக்கு மட்டும் அனுமதியுள்ளது. ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் பிளாஷ்டிக் குடிநீர் கேன்களுக்கு அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !