உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி, திருவாடானையில் சித்திரை தேரோட்டம்

பரமக்குடி, திருவாடானையில் சித்திரை தேரோட்டம்

பரமக்குடி: பரமக்குடியில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று ஈஸ்வரன், மீனாட்சி அம்மன் கோயில்களில் தேரோட்டம் நடந்தது. ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர், விசாலாட்சி சமேத சந்திரசேகரர் திருமண தம்பதியர்களாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று தேரோட்டம் நடந்தது. கயிலை வாத்தியம் முழங்க அம்பாள், சுவாமி பிரியாவிடையுடன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

* திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த 11ல் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சகல அலுங்காரத்துடன் பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருடன் தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !