உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஆதீன இளவரசரானார் குமார சுந்தரர்: நேற்று நித்தி... இன்று திருநா... நாளை...?

மதுரை ஆதீன இளவரசரானார் குமார சுந்தரர்: நேற்று நித்தி... இன்று திருநா... நாளை...?

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளவரசராக ஸ்ரீகுமார சுந்தரரை மதுரை ஆதீனம் நியமித்து முறைப்படி நேற்று பட்டம் சூட்டினார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிள்ளையார்பட்டி வை.திருநாவுக்கரசரை, 38, (இயற்பெயர்), மதுரை ஆதீனத்தின் இளவரசராக பட்டங்கட்டி நியமித்துள்ளேன். பெற்றோர் வைத்தியநாதன், இந்திரா. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து கோயில் தேவஸ்தானத்தில் பேஷ்காராக வைத்தியநாதன் தொண்டாற்றினார். இவரும், எனது தந்தை தியாகி குமாரசுவாமிகளும் ஒன்றாக சிவத்தொண்டு ஆற்றியவர்கள்.திருநாவுக்கரசர் எம்.ஏ., (தமிழ்) பட்டம் பெற்றவர். சிறந்த யோகா ஆசிரியர், பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர், சமஸ்கிருதம் கற்றவர். இவரை மதுரை ஆதீன மடத்தின் மரபுப்படி சகல சுப காரியங்களும் நிறைவேற்றி, தஞ்சை திருப்பனந்தாள் காசிமடத்து காசிவாசி சுவாமிகள் முன்னிலையில், மதுரை ஆதீனத்தின் இளவரசராக பட்டம் சூட்டி நியமனம் செய்து உள்ளேன். இனி இவர், ஸ்ரீலஸ்ரீ குமார சுந்தர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என அழைக்கப்படுவார். மதுரை ஆதீனத்தின் இளவரசராக செயல்படுவார். ஆதீன மரபுப்படி அனைத்து உரிமைகள், மரியாதைகள் வழங்கப்படும். மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு ஆவார். அடுத்த ஆதீன கர்த்தராவார் என்றார்.

இப்போதைக்கு குட்பை: மதுரை ஆதீன இளவரசராக சுவாமிநாதன், நித்யானந்தாவுக்கு மகுடம் சூட்டும்போது தடபுடலாக மதுரை ஆதீனம் விழா நடத்தினார். அது பின்னர் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இதனால் திருநாவுக்கரசருக்கு மகுடம் சூட்டும் விழாவை மிகவும் ரகசியமாகவும், எளிமையாகவும் ஆதீனம் நேற்று நடத்தினார். தாமே விரும்பி சர்ச்சையில் சிக்குவதில் கைதேர்ந்தவர் மதுரை ஆதீனம் என பெயரெடுத்தவர். இம்முறையாவது சர்ச்சைகளுக்கு இடமளிக்கக்கூடாது, என திருப்பனந்தாள் காசிமடத்து காசிவாசி சுவாமிகள் மதுரை ஆதீனத்தை கேட்டு கொண்டார். இதன்படியே திருநாவுக்கரசருக்கு பட்டம் சூட்டும் விழாவை மிகவும் எளிமையாக நடத்தி சர்ச்சைகளுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லி இருக்கிறார் மதுரை ஆதீனம்.

சர்ச்சையின் நாயகன்!

மதுரை ஆதீன மடத்தின் இளவரசராக துாத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரை 2005ல் மதுரை ஆதீனம் நியமித்து தடபுடல் விழா நடத்தினார். சொத்து விபரங்களை சுவாமிநாதன், பெற்றோர் கேட்டதால் கடுப்பான ஆதீனம், சுவாமிநாதனின் இளவரசர் பட்டத்தை ரத்து செய்தார்.பின்னர் நித்யானந்தாவை 2012ல் இளைய ஆதீனமாக நியமித்து மதுரை ஆதீனம் சர்ச்சையில் சிக்கினார். எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்தார்.தற்போது ஆதீன இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட திருநாவுக்கரசர் நீடிப்பாரா என்பது மதுரை ஆதீனத்திற்கும், ஆதீன மடத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த திருஞானசம்பந்தருக்கும் மட்டுமே வெளிச்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !