மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகையில் இறங்கிய வீரஅழகர்
மானாமதுரை:மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர் வெண்பட்டுடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு இடையே இறங்கினார்.மானாமதுரை வீரஅழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினசரி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிய வீர அழகருக்கு வியாழன் அன்று எதிர்சேவை நடந்தது. இரவில் தியாக விநோத பெருமாள் கோயிலில் தங்கிய வீரஅழகர் அதிகாலை புஷ்ப பல்லக்கில் செட்டியார் மண்டகப்படியில் எழுந்தருளினார். அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போதிய போலீசார் பணியில் இல்லாததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
காலை 8.50 மணிக்கு ஆனந்தவல்லி சோமநாதர் ஆலய வாசலில் வீர அழகருக்கு வெண்கொற்ற குடை வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 9.10 மணிக்கு வெண்பட்டு உடுத்தி வீர அழகர் பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் இடையே இறங்கினார். அழகருக்கு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்திகடன் செலுத்தினர்.ஏராளமான பக்தர்கள் கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வீரஅழகரை வழிபட்டனர்.இன்று இரவு நிலாச்சோறு திருவிழா நடைபெறுகிறது. தசாவதார கோலத்தில் வைகை ஆற்றில் வீர அழகர் காட்சியளிக்கிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் வேலுச்சாமி,பாபுஜி உள்ளிட்ட கிராமத்தார்கள் செய்திருந்தனர்.