உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்!

ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்!

ஸ்ரீவில்லிபுத்துார்: சித்ராபவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 9 மணிக்கு ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பத்ரிநாராயணபட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நீலகலர் பட்டு உடுத்தி ஆண்டாள் சேஷ வாகனம், வெண்பட்டு உடுத்தி ரெங்கமன்னார் குதிரைவாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மாடவீதிகள், ரதவீதிகள், மாதாங்ககோவில் தெரு வழியாக வந்து ஆத்துகடைதெருவில் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, வையாளி சேவை நடந்தது. கோவிந்தா, கோபாலா கோஷத்திற்கு மத்தியில் திரளான பக்தர்கள் தரிசித்தினர். வாழைக்குளத்தெரு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, கிரிபட்டர், அனந்தராமன் பட்டர், சுதர்சனன், ஸ்தானிகம் கிருஷ்ணன், வெங்கடேஷ் பங்கேற்றனர்.

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் பச்சைபட்டுடுத்தி இறங்கிய அழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தென்திருப்பதி என அழைக்கப்படும் சாத்துாரப்பன் திருக்கோயிலில் சித்திராபவுர்ணமி விழாவை முன்னிட்டு வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் வீற்றிருந்த சுவாமியை பெரியகொல்லபட்டி கிராம மக்கள் நான்கு மாட வீதி மற்றும் நான்கு ரதவீதி வழியாக எழுந்தருளச்செய்து வைப்பாற்றில் மருத்துவக்குலசங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்ணில் எழுந்தருளச் செய்தனர். பக்தர்கள் சுவாமிக்கு நெய்தீபம், சர்க்கரைதீபம் ஏற்றியும், வத்தல், மல்லி, வெங்காயம் சூறையிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். பின்னர் பெரியகொல்லபட்டிக்கு சென்ற சுவாமி அங்கு முக்கியரதவீதிகள் வழியாக வலம் வந்து அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !