சின்னாளப்பட்டியில் ஆற்றில் இறங்கிய அழகர்
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சித்திரை திருவிழாவின் துவக்கமாக ராம அழகர் சுவாமி மற்றும் சுந்தரராஜ பெருமாள் சுவாமி ஆற்றில் இறங்கினர். கீழக்கோட்டை: ராம அழகர் சுவாமி பச்சை பட்டுடுத்தி வெள்ளை குதிரையில் வந்து, காந்திகிராமத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஓடையான சஞ்சீவி ஆற்றில் இறங்கினார். எதிர்சேவை செய்து பக்தர்களுக்கு காட்சி, தீர்த்தம் அளித்தபிறகு நகர்வலம் வந்தார். திருக்கண் அமைக்கப்பட்ட இடங்களில் மண்டகப்படியார் மற்றும் பொதுமக்களின் அபிஷேகங்களை ஏற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் கீழக்கோட்டை பொன்விழா மைதானத்தில் காளைய கவுண்டர் தசாவதார மண்டகப்படியில் எழுந்தருளினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ராமஅழகர் சுவாமி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேட்டுப்பட்டி: சுந்தரராஜ பெருமாள் சுவாமி பச்சை பட்டுடுத்தி அஸ்வ வாகனத்தில் வந்து, சீவல்சரகு குடகனாற்றில் இறங்கினார். எதிர்சேவை செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்து நகர்வலம் வந்தார். சீவல்சரகு, ஆதிலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட திருக்கண்களில் பொதுமக்களின் அபிஷேகங்களை ஏற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவில் காந்தி மைதானத்தில் பிள்ளைமார் சமூக மண்டகப்படியில் எழுந்தருளினார். சுந்தரராஜபெருமாள் திருப்பணி நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.