மூத்த தேவி சிற்பம் திருப்பூரில் கண்டுபிடிப்பு!
திருப்பூர்: வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் சு.ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர், கொடுவாய் கிராமத்தில், ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சிவன் கோவிலில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, மூத்த தேவி சிற்பம் இருப்பது தெரியவந்தது. அது, 75 செ.மீ., உயரம், 105 செ.மீ., அகலத்தில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இதுகுறித்து சு.ரவிக்குமார் கூறியதாவது:கொங்கு மண்டலத்தில், தொழுவு என்று முடியும் பெயர்கள் கொண்ட ஊர்கள், மிகவும் தொன்மை வாய்ந்தவை. அந்த ஊர்களில், பெருங்கற்படை காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் உள்ளன. கால்நடைகளை செல்வமாக கருதி, அவற்றுக்கு, தொழுவம் அமைத்து காத்தனர். அந்த வகையில், கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்பட்ட ஒரு ஊர் தான், பெருந்தொழுவு என்றழைக்கப்படுகிறது. அங்கும், கொடுவாய் பகுதியிலும், பழமைவாய்ந்த, மூத்த தேவி சிற்பங்கள் காணப்படுகின்றன. சமஸ்கிருதத்தில், ஜ்யேஷ்டா தேவி என்பர். மூத்த தேவி என்பது தமிழில், மூதேவி என மாறிவிட்டது. பல்லவர் காலத்துக்கு முன்பாகவே தமிழர்களின் தாய்த் தெய்வங்களில், மூத்த தேவியும் இருந்திருக்கலாம். ஒருபுறம் காக்கை, மறுபுறம் துடைப்பம், காளை உருவம், தாமரை, தலையில் கிரீடம், காதில் தாடங்கம், கழுத்து, கைகளில் அணிகலன்கள் அணிந்த நிலையில் சிற்பங்கள் காணப்படுகின்றன. பண்டைய தமிழர்கள் போர் வெற்றிக்காக கொற்றவையையும், வணிக வளத்திற்காக அய்யனாரையும் வழிபட்டதுபோல், வேளாண்மை செழிப்புக்காக, மூத்த தேவியை வழிபட்டு இருக்கலாம் என, தெரிய வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -