தோட்டத்தில் தங்கிய காஞ்சி வரதராஜ பெருமாள்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சின்ன காஞ்சிபுரம் தோட்டத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை மாதம் நடக்கும் நடவாவி உற்சவத்தை தொடர்ந்து, நேற்று காலை, சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் உள்ள தோட்டத்தில் எழுந்தருளினார். இதற்காக நேற்று காலை, 5:30 மணிக்கு கோவிலில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு, தோட்டத்திற்கு சென்றார். அங்கு, 1:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சேனை முதன்மையாருடன் பற்றி உலாத்தல் நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், நள்ளிரவு, 12:00 மணிக்கு ஆராதணம் நடைபெற்றது. இன்று காலை, 4:45 மணிக்கு தாத்தாச்சாரியர்களுக்கு மரியாதை முடிந்த பின் பெருமாள் கோவிலுக்கு சென்றார். கோடை காலம் என்பதால் மரங்கள் சூழ்ந்த தோட்டத்தில் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், கடந்த, 500 ஆண்டுகளுக்கு மேல் இந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.