உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜாரி-அறங்காவலர் மோதல்: மடப்புரத்தில் உச்சிக்கால பூஜை நிறுத்தம்!

பூஜாரி-அறங்காவலர் மோதல்: மடப்புரத்தில் உச்சிக்கால பூஜை நிறுத்தம்!

திருப்புவனம்: திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தலைமை பூஜாரிக்கும் அறங்காவலர் குழு தலைவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் உச்சிக் காலபூஜை தாமதமாக நடந்தது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தினசரி மூன்று கால பூஜை நடைபெறும். இதில் நண்பகல் ஒரு மணிக்கு நடைபெறும் உச்சிக் கால பூஜை பிரசித்தி பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். நேற்று முன்தினம் (வியாழன்) காலை தலைமை பூஜாரி பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அறங்காவலர் குழு தலைவரான  ஜெய்சங்கருக்கும், அறங்காவலர் தலைவர், உறுப்பினர் பெயர் பலகை வைப்பதில் மோதல் ஏற்பட்டது. கோபமடைந்த தலைமை பூஜாரி உச்சிக்கால பூஜையை நடத்தாமல் வெளியேறினார். அறங்காவலர் ஜெய்சங்கர் வேறு நபர்களை வைத்து பூஜையை நடத்த முயன்ற போது பன்னீர்செல்வம்,மற்ற பூஜாரிகள் தடுத்தனர். உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஊழியர்கள்,பக்தர்கள் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர் மாலை மூன்று மணிக்கு பூஜை நடந்தது. உச்சிக் கால பூஜையில் அம்மனை தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் வேதனையடைந்தனர். அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் கூறுகையில்: ‘‘உச்சிகால பூஜையில் பூஜாரி அங்க வஸ்திரம் கட்டி கொண்டு பூஜை செய்ய வேண்டும்.ஆனால் தலைமை பூஜாரி பன்னீர்செல்வம் அப்படி செய்வதில்லை,இதை கேட்டபோது வீண் பழி சுமத்துகின்றனர்,’’ என்றார். கோயில் இணை கமிஷனர் ரோசாலின் சமதா கூறுகையில்: ‘‘கோயிலில் பூஜை தாமதமாக நடந்தது தெரியாது. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறேன்,’’ என்றார். பூஜாரி பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை அறிய தொடர்பு கொண்ட போது அவர் அலைபேசியை எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !