உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துடைப்பத்தால் அடித்துக்கொண்ட உறவினர்கள்: கோயில் விழாவில் வினோதம்!

துடைப்பத்தால் அடித்துக்கொண்ட உறவினர்கள்: கோயில் விழாவில் வினோதம்!

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில், மாமன்- மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் துடைப்பத்தால், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வினோத நிகழ்ச்சியை நடத்தினர். மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தது. அம்மனுக்கு கரகம் எடுத்து, பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, முளைப்பாரி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முக்கிய நிகழ்வாக, மூன்றாம் நாளில் மாமன்- மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் கோயில் முன் கூடினர். ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு, உடல் முழுவதும் சேறு பூசி, கரியை முகத்தில் தடவினர். கோயில் முன் விழுந்து வணங்கி கையில் பழைய துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, மாமன் - மைத்துனர் உறவு முறை உள்ளவர்களை அடித்தனர். அடிபடுபவர்கள் யாரும் அடிப்பவர்கள் மீது கோபப்படுவதில்லை.  மைக்ஷெட் பாடல் ஒலிக்கும் ஆட்டத்துடன் பல மணி நேரம் நடந்த நிகழ்ச்சியை காண வெளியூரில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். வெளியூர்க்காரர்கள், உறவு முறை அல்லாதவர்களை உள்ளூர்வாசிகள் தொந்தரவு செய்வதில்லை. மாடுகளை கயிற்றில் கட்டி கூட்டிச்செல்வது போல் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டி கூட்டிச்சென்று அடிக்கும்போது அடிபடுபவர்கள் கோபப்படாமல் இருப்பதால், அவர்களின் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் என்ற நம்பிக்கையில் இது நடத்தப்படுகிறது. இதனை சிலர் முத்தாலம்மனுக்கு நேர்த்திக்கடனாக செய்வதாகவும் மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !