சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்
அம்மாபேட்டை: சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் கடந்த, 2ம் தேதி காலை, 7.30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், நேற்று காலை, அக்னி நட்சத்திர துவக்கத்தையொட்டி, சூரிய பிரபை வாகனத்தில் சவுந்திரராஜர் திருவீதி புறப்பாடு நடந்தது. மாலையில், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று காலை, இந்திர விமானத்தில் திருவீதி புறப்பாடு, மாலையில் கஜ வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். நாளை காலை, பல்லக்கில் சுவாமி புறப்பாடு, இரவு, 7 மணிக்கு பெரிய கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. 11ம் தேதி, தேரோட்டம் நடக்கும். அதில், உபயநாச்சியார்களுடன் பெருமாள் தேரில் எழுந்தருளி சேவை ஸாதிப்பார். மாலையில், சந்திர பிரபையில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. மே, 14ம் தேதி இரவு, 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் பெருமாள் உபயநாச்சியார்களுடன் சப்தாவரணத்துடன், பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.