சிரிப்பது சில பேர் அழுவது பல பேர் இருக்கும் நிலை என்று மாறுமோ?
ஒருநாளில் குழந்தைகள் 400 தடவையும், இளைஞர்கள் 17 தடவையும் சிரிக்கிறார்கள். வயதானவர்களுக்கு சிரிப்பை விட அழுகை தான் அதிகமாக இருக்கிறது. பெற்றோர் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைப்பது கூடாது. வெட்ட வெளியில் ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். இதனால், அவர்கள் சிரித்து மகிழ்வார்கள். உடலும் மனமும் புத்துணர்வு பெறும். அனைவரும் மனம் விட்டுச் சிரிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நமக்குள் இருக்கும் முரண்பாடு, வாக்குவாதம் செய்யும் தன்மை, கோபதாபம் அனைத்தும் மறைந்து போகும். மகிழ்ச்சியுடன் பாடுங்கள். நடனம் ஆடுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். மகிழ்வான எண்ணமே உங்களை இசைவான உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். பிறர் மகிழ்ச்சியில் முகம் மலர்வதும், பிறர் துன்பம் கண்டு வருந்துவதும் நல்ல மனிதர்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். நீங்கள் நேசிக்கும் மனிதர் மீது அன்பு செலுத்துவதில் பெருமை இல்லை. பிடிக்காத ஒருவர் மீதும் அன்பு காட்ட முடிந்தால் தான், வாழ்வில் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். துப்பாக்கி சாதிக்காததை அன்பு சாதிக்கும். அன்பை விட சக்தி மிக்கது வேறில்லை. அன்பு ஒன்றால் மட்டுமே உலகில் உள்ள அனைவரின் இதயங்களையும் வெல்ல முடியும்.
அழுக்கான துணியை நீரில் அலசி சுத்தப்படுத்துவர். அதுபோல, தீய குணங்களால் அழுக்கடைந்த மனதையும் நல்லெண்ணம் என்னும் நீரால் அலசி தூய்மையாக்க வேண்டும். நியாயமான பயம் மனிதனுக்கு அவசியமானது. நேர்வழியில் நடக்கவும், கடவுள் மீது பக்தி செலுத்தவும், சட்டம், ஒழுங்கு, அமைதி நிலைக்கவும் பயமே துணை செய்கிறது. உங்களுக்காக மட்டும் சுயநலத்துடன் சிந்திக்காதீர்கள். பிறருக்கு நம்மால் என்ன நன்மை செய்ய முடியும் என்றும் சிறிது யோசியுங்கள். பிறருக்கு சேவை செய்வதே மேலான மகிழ்ச்சி என்பதை உணருங்கள். பூரண நம்பிக்கையுடன் கடவுளைச் சரணடையுங்கள். மனதை எப்போதும் சீரான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். மனதில் உறுதியையும், அமைதியையும் நிரப்புங்கள். உங்களது முன்னேற்றம், செல்வம் குறித்து சிறிதும் கர்வம் கொள்ளாதீர்கள். அகங்காரத்தின் மூலம் வெற்றி பெற்றாலும், அதை தோல்வியாகவே கருத வேண்டும். ஆனால், அன்பில் நீங்கள் தோல்வி அடைந்தால் கூட மாபெரும் வெற்றியே. நான் அற்பமானவன்’ என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். உலகில் உங்களுக்குஉரிய பங்கினைச் சரிவரச் செய்வது அவசியம். ஆக்கபூர்வமாக செயல்களில் ஈடுபட்டு சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுங்கள். நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு எண்ணமும் பூமியிலும், அண்ட வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அமைதி மிக்க நல்லெண்ணங்களையும், நல்ல வாழ்த்துக்களையும் மட்டுமே பரவவிடுங்கள். (மகான் ரவிசங்கர்ஜி)