உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமினா அது முருகன் தான்!

சுவாமினா அது முருகன் தான்!

கடவுள் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். விநாயகர், சிவன், விஷ்ணு என எல்லா கடவுளரையும் பொதுவாக சுவாமி என குறிப்பிட்டாலும் சமஸ்கிருதத்தில் இச்சொல் சுப்பிரமணியரை மட்டுமே குறிக்கிறது. அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சமஸ்கிருத அகராதியில் இதற்கான சான்று உள்ளது. அமர கோசம் என்றால் அழிவில்லாத பொக்கிஷம் என்பது பொருள்.

முருகனுக்கு பெருமாள் பெயர்: அருணகிரிநாதர் முருகனை பெருமாள் என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய திருப்புகழ் நூலில், ஒவ்வொரு பாடலின் கடைசி வரியிலும், பெருமாளே என்ற சொல் இடம்பெறும். பெருமாள் என்பது திருமாலைக் குறிக்கும் சொல்லாகவே இன்று வரை இருந்து வருகிறது. முருகனை தமிழக மக்கள் திருமாலின் மருமகன் என்பதால் மால்மருகன் என்று அழைப்பர். முருகனை மணந்த இந்திரனின் மகள் தெய்வானை, நம்பிராஜன் மகள் வள்ளி இருவரும் திருமாலின் மகள்களாக முற்பிறவியில் அமுதவல்லி, சுந்தரவல்லியாக வளர்ந்தனர். பின்னரே முருகனை மணக்கும் பேறு பெற்றனர். சிவ, விஷ்ணு இருவருக்கும் பாலமாக சிவபாலனாகவும், மால் மருகனாகவும் முருகன் விளங்குகிறார்.

அப்பாவின் விருப்பம்:  வரம் பெற்ற சூரபத்மனை என்னால் கொல்ல முடியாது. என்னைக் காட்டிலும் வலிமை மிக்க ஒருவன் வரவேண்டும் என்று சிவனே முருகனை படைத்தார். அவன் தன்னை விட ஞானம் மிக்கவன் என்பதை உலகிற்கு உணர்த்த, மகனிடமே உபதேசம் பெற்றுக் கொண்டார். எதிலும் தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவன் கூட, தன் பிள்ளை தன்னை விட முன்னேறி, தன்னையே தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புவான். இதனை புத்ராத் இத்தேச்பராஜயம் என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடுவர். பரம்பொருளான சிவனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தன்னை விட தன் பிள்ளைகள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க விரும்பினார். ஒருவர் யானை பலத்துடன் விளங்கினார். இன்னொருவர் வேல் எறிந்தால், அது மலையையே பிளக்கும் சக்தியைப் பெற்றிருந்தார்.

எளியவர்களின் தெய்வம்: தமிழகத்தில் முருகபக்தர்கள் மிக அதிகம். முருகனுக்கும் முத்தமிழுக்கும் நெருக்கம் அதிகம். வைதாலும் அருள்புரிபவர் என்று அவரைக் குறிப்பிடுவர். தாயைப் போல பிள்ளை என்பது போல, தன் அன்னை பார்வதியைப் போல முருகனும் அழகு வடிவாகவும், அருள் (கருணை) வடிவாகவும் திகழ்கிறார். அவர் எல்லாருக்கும் அருள்பவர் என்ற பொருளில், தீன சரண்யன் என்று குறிப்பிடுவர். எளிய மக்களின் புகலிடமாக இருப்பவர் அவர். அதனால், மலை, காடு, நதி என்று எல்லா இடங்களிலும் முருகன் கோயிலை அமைத்து வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !