சோளிங்கர் மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் இழுபறி
சோளிங்கர்: சோளிங்கர் மலைக்கோவிலுக்கு, ரோப்கார் அமைக்கும் திட்டத்தில் இழுபறி நிலவுவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆழ்வார்களால் பாடல்பெற்ற தொண்டை மண்டல வைணவ திருத்தலங்களில், வேலூர் மாவட்டம், சோளிங்கர் யோகநரசிம்ம சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் செங்குத்தான மலை மீது உள்ளதால், 1,700 படிகட்டுக்களை கடந்து சென்று தான், சுவாமியை தரிசிக்க முடியும். அத்துடன் இந்த மலைக்கு எதிரில், 700 படிகட்டுக்களுடன் உள்ள சிறிய மலையான யோக ஆஞ்சநேயர் கோவிலையும் தரிசித்தால் தான் முழு பயன் கிடைக்கும். இதனால் வயதான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கோவிலுக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். வசதியானவர்கள் டோலி மூலம் மலைக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்து விட்டு வருகின்றனர். இதனால், மலை கோவிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், ரோப்கார் அமைக்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணி நடந்து வந்தது. ரோப்கார் அமைக்க, இரண்டு கி.மீ., தூரத்துக்கு சாலையும் போடப்பட்டது. ஆனால், பல்வேறு தொழில் நுட்ப காரணங்களினால் ரோப் கார் அமைக்கும் பணி தடைபட்டது. கடந்த, 2014 டிசம்பர் மாதம் முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் ரோப்கார் அமைக்கும் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான டெண்டர் இது வரை விடப்படவில்லை. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில்,அரசின் ஒப்புதல் கிடைக்காததால் டெண்டர் விடப்படவில்லை. பெங்களூரைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுக்க முயற்சித்தது. கமிஷன் பிரச்னையால், டெண்டர் எடுக்க அவர்களால் முடியவில்லை, என்றனர்.