திருத்தணி கோவில் குடில்களில் பராமரிப்பு பணிகள்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, பக்தர்களின் புகார்களை தொடர்ந்து, 85 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டு, துரித வேகத்தில் நடந்து வருகின்றன. திருத்தணி முருகன் கோவிலுக்கு, வெளியூர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, கோவில் நிர்வாகம் சார்பில், குடில்கள், அறைகள் கட்டப்பட்டு குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது.
அடிப்படை வசதி இல்லை: இங்கு, 55 குளிர்சாதன குடில், 36 சாதாரண குடில், 133 அறைகள் என, ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு, குளிர்சாதன குடிலுக்கு, 1,000 ரூபாய்; சாதாரண குடிலுக்கு, 600 ரூபாய்; அறைக்கு, 300 ரூபாய் வீதம் கோவில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், விடுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தண்ணீர், குளிர்சாதன பெட்டி, ஹீட்டர் பழுது போன்றவற்றால் பக்தர்கள் அவதிப்பட்டனர். இதனால் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து, பக்தர்கள், கோவில் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து, பக்தர்களின் புகார் குறித்து, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தேவஸ்தான நிர்வாகம், பழுதடைந்த குடில்களை சீரமைக்க தீர்மானித்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது. தற்போது பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
புகார்கள் மீது...: கோவில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தனபாலன் கூறியதாவது: தணிகை இல்லத்தில் பழுதான குடில்கள் மற்றும் அறைகளை சீரமைக்க, 37 லட்சம் ரூபாயும்; கார்த்திகேயன் இல்லத்தில் பழுதான குடில்கள் மற்றும் அறைகளை சீரமைக்க, 48 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் தணிகை இல்லத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்துவிடும். அதன்பின், கார்த்திகேயன் குடில்களில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். இனிவரும் காலங்களில் பக்தர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.