ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவில் 300 ஆண்டாக தொடரும் சம்பிரதாயம்!
வாழப்பாடி: வாழப்பாடியில், ஆண்கள் மட்டும் வழிபடும், 300 ஆண்டுகள் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவிலில், விடுமுறை நாளில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில், கொட்டிப்பள்ளம் ஓடை அருகே, சிங்கிபுரம் காலனி வனப்பகுதியில், 300 ஆண்டுகள் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் உள்ளது. அங்கு, மூலவருக்கு வடதிசையில், சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய, ராட்சத சுவாமி சிலைகள் காணப்படுகின்றன.ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப் பகுதியில் கோவில் உள்ளது. இரவில் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர்கள் தங்கி, சக்தி திரட்டுவதால், முனி உலவுவதாக நம்பிக்கை கொண்டு, அங்கு பெண்கள் செல்ல முன்னோர்கள் தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால், 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலில், ஆண்களே பொங்கல் வைத்து, சுவாமிக்கு படைக்கின்றனர். நேர்த்திக்கடனாக, கிடா, கோழி பலியிட்டு, கோவில் வளாகத்திலேயே சமைத்து சாப்பிடுகின்றனர். அந்த பொங்கல், கறியை, பெண்கள் சாப்பிடக்கூடாது என்பதால், ஆண்கள் வீட்டிற்கும் எடுத்து செல்வதில்லை. இந்த கோவில் விபூதியை கூட, பெண்கள் வைப்பது கிடையாது. இந்த கோவிலில், விடுமுறை நாளில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்களும் குவிகின்றனர்.