வேளாங்கண்ணி திருத்தேர் பவனி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!
வேதாரண்யம்: உலக பிரசித்திப்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்களாக நடந்து வருகிறது.விழா நாட்களில் கோவிலில் தமிழில் திருப்பலியும், கீழ் கோவிலில் தினமும் தமிழ், மராட்டி, ஆங்கிலம், கொங்கனி, இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்து வருகிறது.விழா நாட்களில் மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றமும், மாலை ஆறு மணியளவில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுறை, திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியனவும், நேற்றிரவு புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தேர் பவனியும் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர் பவனி நேற்று இரவு நடந்தது.இதையொட்டி மாலை ஐந்து மணியளவில் கோவில் கலையரங்கில தமிழில் ஜெபமாலை மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடந்தது.தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. இரவு ஏழரை மணியளவில் அன்னையில் திருத்தேர் பவனி நடந்தது.இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.இன்று எட்டாம் தேதி காலை புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலையில் விழாவின் நிறைவாக மாதாவின் திருக்கொடி இறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வேளாங்கண்ணி கோவில் அதிபர் மைக்கேல், பங்குத்தந்தை மற்றும் துணை அதிபர் ஆரோக்கிய தாஸ், பொருளாளர் தர்சீஸ் ராஜ் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை மாவட்ட எஸ்.பி., ராமர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.