கோட்டை மாரியம்மன் கோவில் தேரில் தங்கம் உள்ளதா?
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கத்தேர், மூன்று ஆண்டுகளாக திருவீதி உலா வராததால், தேரில் தங்கம் உள்ளதா என, சந்தேகம் எழுந்துள்ளது, என, கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு, அவர் எழுதியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக கோவில்களில் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களால் செய்யப்பட்ட நகைகள் உள்ளன. அவற்றை, வெளியாட்கள் கொள்ளையடித்து வந்தனர். தற்போது, அறநிலைய துறையில் பணியாற்றக்கூடிய, சில அதிகாரிகளே நகைகளை திருடுகின்றனர்.
சமீபத்தில் உப்பிலியப்பன் கோவில் நகையை, கோவில் செயல் அலுவலரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது, பக்தர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழக கோவில்களுக்கு, பணம் மற்றும் ஆபரணங்களை பக்தர்கள், காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு கோவிலில் உள்ள நகைகள், அசலா என்பதை கண்டறியும், நகை சரிபார்ப்பு அலுவலர்கள், பல்வேறு கோவில்களில், செயல் அலுவலர்களுடன் சேர்ந்து, முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். நகைகளை பாதுகாப்பு கருதி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மக்கள் பெற முடியாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர், மூன்று ஆண்டுகளாக திருவீதி உலா வரவில்லை. தேரில் தங்கம் உள்ளதா என, சந்தேகம் எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி, கோவில்களில் உள்ள நகைகள் பற்றிய விவரத்தை, பக்தர்கள் தெரிந்து கொள்ள சட்டம் கொண்டுவர வேண்டும். கோவில் நகைகளை, ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். நகைகளை தேவைக்கு போக, மீதம் உள்ளதை, திருப்பதி தேவஸ்தான வைப்பு போல், வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.