உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை திறப்பு: ஓண விருந்து துவங்கியது!

சபரிமலை நடை திறப்பு: ஓண விருந்து துவங்கியது!

சபரிமலை: ஓணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நான்கு நாட்கள் நடைபெறும் ஓண விருந்து, நேற்று துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்திப் பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஓணம் பண்டிகைக்காக, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு, மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறந்தார். நேற்று அதிகாலை வழக்கம் போல், கணபதி ஹோமத்துடன், பூஜைகள் துவங்கின. நேற்று, ஓணம் பண்டிகையின் முதல்நாள், உத்திராட விருந்து நடந்தது. விருந்து நிகழ்ச்சி, சபரிமலை மேல்சாந்தி சசி நம்பூதிரி சார்பில் நடத்தப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில், கலந்து கொண்டனர். இன்று டாக்டர் மணிகண்டன் சார்பில், 61வது ஆண்டாக, ஓணம் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (10ம் தேதி) பெங்களூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது சார்பில், அவிட்டம் நாள் ஓண விருந்தும், 11ம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் சார்பாக, பக்தர்களுக்கு சதய நாள் ஓண விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல், வரும் 11ம் தேதி வரை, அய்யப்பனுக்கு தினமும் சகஸ்ரகலசாபிஷேகமும், களபாபிஷேகமும் நடைபெறும். மேலும், சிறப்பு வேண்டுதலான உதயாஸ்தமனம் மற்றும் படி பூஜை ஆகியவையும் நடைபெறும். ஓணம் பண்டிகை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, 11ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். புரட்டாசி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !