ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நீர்க்கசிவால் பக்தர்களுக்கு ஆபத்து!
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கருவறை அருகே கட்டடத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலமானது மிகவும் பழமை வாய்ந்ததாகும். ஜூன், ஆகஸட் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயில் புனரமைப்பு பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து முடிந்து 2015 ஜூன் 29ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில், கோயில் கருவறையின் மேற்பகுதியில் மழை பெய்யும் போது நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வழிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கருவறை பக்கத்தில் விநாயகர் சன்னதி அருகே பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வந்த போது பிரகாரத்தின் மேற்பகுதியிலிருந்து பெரிய கருங்கல் கீழே விழுந்தது. அந்த இடத்தில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கபட்டது. தற்போது கருவறை அருகே நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆடிப்பூரத்திருவிழா துவங்க இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்குள் நீர்க்கசிவு பகுதியை சீரமைத்து கோயிலில் புனரமைப்பு பணிகளை செய்ய வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.