பகவத் ராமானுஜருக்கு வைரமுடி உற்சவம்!
ADDED :3453 days ago
மீஞ்சூர்: பகவத் ராமானுஜருக்கு வைரமுடி பொருத்தும் உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது மீஞ்சூர் அடுத்த, புங்கம்பேடு கிராமத்தில், சீனிவாச பெருமாள் கோவிலில், பகவத் ராமானுஜர் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ராமானுஜர் திருஅவதார தினத்தில், வைரமுடி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று நடந்த, பகவத் ராமானுஜரின், 999வது திருஅவதார உற்சவ விழாவில், காலை, 6:00 மணி முதல், ஊஞ்சல் சேவை, ஈரவாடை தீர்த்தம், பரிவட்ட பகுமானம் சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதை தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரங்களுடன் வீற்றிருந்த பகவத் ராமானுஜருக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க வைரமுடி பொருத்தப்பட்டு, கற்பூர தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள், பஜனை பாடல்களை பாடினர்.