ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் வாடிய மாலையில் கல்யாண உற்சவம்!
திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், உற்சவ மூர்த்திகளுக்கு, வாடிய மாலையுடன் கல்யாண உற்சவம் நடத்தி வருவது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், கல்யாண உற்சவ மண்டபத்தில், சிவன், பார்வதி கல்யாண உற்சவம் தினமும் நடந்து வருகிறது. உற்சவத்தின் போது, சிறிய கோவில்களில் கூட, மலர் மாலைகள் தயார் செய்து, புதிய ஆடை அணிவித்து உற்சவம் நடப்பது வழக்கம். ஆனால், ஸ்ரீகாளஹஸ்தியில், உற்சவத்தின் போது, உற்சவ மூர்த்திகளுக்கு, பழைய வாடிய மலர் மாலை அணிவிக்கப்படுகிறது. புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்காமல், உற்சவம் நடத்தி வருகின்றனர். உற்சவ சிலைகளும் சுத்தம் செய்யாமல், பழைய சிலைகளை போல் காட்சி அளிக்கின்றன. ஆண்டுக்கு, 70 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும் இந்த கோவிலில், உற்சவ மூர்த்திகளை சுத்தம் செய்து, புதிய மாலைகள், ஆடைகள் அணிவிக்காமல், கல்யாணம் உற்சவம் நடத்துவது, பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.