கோடிபுதூர் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா: விமர்சையாக நடந்த பரணை ஏறுதல் நிகழ்ச்சி
கோடிபுதூர் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா: விமர்சையாக நடந்த பரணை ஏறுதல் நிகழ்ச்சிபோச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவில், முக்கிய நிகழ்வான பரணை ஏறுதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூரில், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 106வது ஆண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிழ்வான பரணை ஏறுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பத்திரகாளியம்மன், அய்யனார், முருகன், கருப்பசாமி ஆகிய சுவாமிகளின் முன்பு, மூங்கிலால், ஐந்து பரண்கள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு பரணில் பன்றியையும், மற்ற, நான்கு பரண்களில், ஆடுகளும் ஏற்றப்பட்டன. அருள் வந்து சாமி ஆடிய பூசாரி, பரண் மீது ஏறி, பன்றியின் மார்பு பகுதியை கிழித்து, அதில் பழத்தை போட்டு, ரத்தத்துடன் கலந்து பூஜை செய்தார். பின்னர் அதை பக்தர்கள் கூட்டத்தை பார்த்து வீசினார். அதை குழந்தை வரம் வேண்டும் பெண்கள் பய பக்தியுடன் மடியேந்தி வாங்கி சாப்பிட்டனர். தொடர்ந்து பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. பின், 1000 க்கும் மேற்பட்ட ஆடுகளையும், பன்றிகளையும் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.