ராஜகணபதி கோவிலில் கோடி அர்ச்சனை கோலாகலம்
சேலம்: ராஜகணபதி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், கோடி அர்ச்சனை பெருவிழா நேற்று, கோலாகலமாக துவங்கியது. சேலம், ராஜகணபதி கோவிலில், உலக நன்மைக்காக, 1976ம் ஆண்டு கோடி அர்ச்சனை விழா நடந்தது. அந்த விழா, தொடர்ந்து, 33 நாட்கள் நடக்கும். விழா முடிவில், கோடி அர்ச்சனைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. இதனாலேயே, கோடி அர்ச்சனை என்ற பெயரும் வந்தது. அதற்கு, அதிக பணம் செலவாகும். இதனால், 1976க்கு பின், விழாவை நடத்த யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில், நடப்பாண்டு விழா நடத்த, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. அதற்கு, பலர் ஒத்துழைப்பு அளித்தனர். இதனால், இந்த நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. தொடர்ந்து, ஜூலை, 11ம் தேதி வரை கோடி அர்ச்சனை நடக்கிறது. இதில், தினமும், 3 லட்சத்து, 50 ஆயிரம் அர்ச்சனைகள் இடம்பெறும். நேற்று, ராஜகணபதிக்கு பூக்கள் தூவி, கோடி அர்ச்சனை துவங்கியது. அதில், 20 குருக்கள், 100 பாடசாலை மாணவர்கள், 40 சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு, பூஜை செய்தனர்.