உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி : திருத்தணி அருகே, பாமா ருக்மணி மற்றும் கிருஷ்ணர் கோவிலில் நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். கனகம்மாள்சத்திரம் அடுத்த, பழைய பனப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது பாமா ருக்மணி உடனுறை கிருஷ்ணர் கோவில். இக்கோவில் திருப்பணிகள் நாலரை லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டு, கோவிலின் மீது புதிய விமானம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு நான்கு கால யாகசாலை பூஜைகளும், காலை 7.30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு புதிய விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மூலவர் கிருஷ்ணர், பாமா ருக்மணி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு உற்சவர் கிருஷ்ணர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் ரமேஷ்காந்த் உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்கு சதாசிவம் குழுவினரால் கர்ணமோட்சம் வீதி நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !