திருத்தணி கோவில் பிரசாத கடை ஏலம் ஒத்திவைப்பு
திருத்தணி: முருகன் கோவிலின் முடி காணிக்கை, பிரசாத கடை மற்றும் பல வகை கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தலைமுடி, மலைக்கோவிலில் பிரசாத கடை மற்றும் 15க்கும் மேற்பட்ட கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான ஏலம், நேற்று காலை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன், வேலுார் இந்து அறநிலை துறை மண்டல இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. தலைமுடி, 2.50 கோடி ரூபாயும், பிரசாத கடை, 1.50 கோடி ரூபாய் என, தொகை நிர்ணயித்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. கோவில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி பெட்டியில், காலை, 11:45 மணி வரை யாரும் விண்ணப்பம் போடவில்லை. அதே போல் பிரசாத கடைக்கும் யாரும் விண்ணப்பம் போடவில்லை; இதனால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. மறுஏலம், மீண்டும் நாளிதழில் விளம்பரம் வெளியிட்டு ஏலம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதே போல் நேற்று மதியம், மலைக்கோவிலில் உள்ள கடைகளுக்கு ஏலம் நடத்த திட்டமிட்டிருந்தது. அதற்கும் யாரும் விண்ணப்பிக்காததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.