சென்னிமலை கோவிலில் அருணாகிரிநாதர் சிலை: 19ம் தேதிக்குள் நிறுவ பக்தர்கள் எதிர்பார்ப்பு
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், சேதமடைந்து நீக்கிவிட்ட அருணாகிரி நாதர் சிலையை, அவரது குருபூஜை தினத்துக்குள் நிறுவ வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில், பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க புராதாண தலம். இங்கு, 18 சித்தர்களில் ஒருவரான அருணகிரிநாதர் வாழ்ந்துள்ளார். அழகு தமிழ் தெய்வம் முருகனை வாயார, மனதார பாடி துதித்த அடியார்களில் முதன்மையானவராக, திருப்புகழ் தந்தருளிய சித்தரான அருணகிரிநாதர், பல கோவில்களுக்கு சென்று முருகனை துதித்து பாடினார். ஆனாலும் அவர் காட்சி தரவில்லை. உனை எனதுள் நினையும் அன்பைத் தருவாயே என்று, சென்னிமலை முருகன் கோவிலில் மனமுருகி பாட, முருக பெருமான் காட்சி தந்து, படிக்காசுகளையும் தந்ததாக, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தல வரலாறு கூறுகிறது. இதை உணர்த்தும் வகையில், சென்னிமலை மூலவர் கோபுரத்தின் தென் பகுதியில், அருணாகிரி நாதர் சிலையும் இடம் பெற்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் பலர் விழுந்தனர். இதில் சிலை சேதமாக, கோவில் நிர்வாகம் அகற்றி விட்டது. அதன் பின்பு கோவில் நிர்வாகத்துக்கு, பக்தர்கள் பல முறை கோரிகைக்கை வைத்தும், இன்னும் சிலை நிறுவவில்லை. இதுகுறித்து கேட்டபோது, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். சிலையும் தயாராக உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் நிறுவப்படும் என்று, கோவில் தரப்பில் கூறுகின்றனர். வரும், 19ம் தேதி அருணகிரிநாதர் குரு பூஜை வருகிறது அதற்குள் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.