திருப்பதி மலை ஏறும்போது கூற வேண்டிய சுலோகம்!
திருமலையைக் கண்டதுமே ஸ்ரீராமானுஜரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அதனை அவர் நெடுநேரம் கண் கொட்டாமல் பார்த்தார்; அவரது கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவர் நினைத்தார்; எம்பெருமான் திருமகளுடன் நித்தியவாசம் செய்யும் புனிதத்தலம் இது. ஆகா! என்னே இந்த மலையின் தெய்விக எழில்! பூமியின் திரண்ட எல்லாப் பண்புகளுமே இந்த மலையுருவம் கொண்டுள்ளன. பெருமதிப்பு வாய்ந்த இந்தத் திருமலையில் திருமகளும் நாராயணனும் வாழ்கிறார்கள். எனது பாவ உடலைக் கொண்டு இதன் மீது மிதித்து ஏறி, இதை அசுத்தப்படுத்த மாட்டேன். இங்கிருந்தே இதைப் பார்த்துப் பார்த்து, என் உடலையும் மனதையும் தூய்மையுறச் செய்து பேறு பெறுவேன். இப்படி எண்ணி, அவர் திருமலையின் அடிவாரத்திலேயே தங்கினார். பக்தர்கள் பலவாறு வேண்டிக் கேட்ட பிறகு அவர் மலையேறி பெருமாளை மனம் குளிரத் தரிசித்தார்.
அத்தகைய திருமலையில் ஏறும்போது கூற வேண்டிய சுலோகம் இது:
ஸவர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸேவந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸத்யா தயயா பாபசேதஸ:
த்வன்மூர்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே
பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கட மலையை வந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கமயமானதும், அளவு கடந்த புண்ணியமுள்ளதும், எல்லாத் தேவர்களாலும் சேவிக்கப்பட்டதும் ஸ்ரீநிவாசனுக்கு இருப்பிடமுமான ஹே மலையே! தங்கள் மீது கால்களை வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே, அதனால் ஏற்படும் எனது பாவத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். தங்களது சிகரத்தில் வசிக்கும் லக்ஷ்மீபதியான ஸ்ரீவேங்கடேசப் பெருமானைத் தாங்கள் எனக்குத் தரிசனம் செய்து வைக்க வேண்டும்.