வங்கியை மாற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பதி: வட்டி விகித மாற்றத்தால், திருமலை திருப்பதி தேவஸ்தானம், குறைந்த வட்டி தரும் வங்கிகளில் உள்ள வைப்புநிதியை, பிற வங்கிகளுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, தேவஸ்தானத்தின் அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தரும் நன்கொடை என, தினமும், 2 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. விழாக்காலங்களில், 4 கோடி ரூபாய் வரை கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் தொகை, வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதன்படி, தேவஸ்தானம், 972 வங்கிகளில், 8,000 கோடி ரூபாய் ரொக்கம், 6 டன் தங்க, வைர நகைகளை, மூன்று முதல் ஐந்து ஆண்டு கால வைப்பு நிதியாக வைத்துள்ளது. தற்போது, வங்கிகளின் வட்டி விகிதம் ஒரே விதத்தில் இல்லாமல், உயர்ந்தும், தாழ்ந்தும் வருகிறது. அதனால், வைப்புநிதியை, வட்டி விகிதம் அதிகமுள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்ற, தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஒரே நாளில் ரூ.3.64 கோடி : திருப்பதி தேவஸ்தானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல், புதன்கிழமை மாலை வரை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டது. ஒரே நாளில் 3.64 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.