பஞ்சபாண்டவர் மலை பொக்கிஷம் பாதுகாக்கப்படுமா?
தவம் என்ற தவமணி உணர்வுபூர்வமாக படம் எடுப்பவர்,எடுத்த படத்தை வைத்து உணர்ச்சிபூர்வமாக எழுதும் ஆற்றல் பெற்றவர்.எனது இனிய நண்பர். புகைப்படக்கலையிலன் வளர்சிக்காக மதுரையில் இயங்கும் பழமையான இமேஜ் புகைப்படக்கழகத்தின் உறுப்பினர், கடந்த வாரம் அங்கு நடைபெற்ற கூட்டத்தின் போது தவம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படியே எங்க மேலுாருக்கு வந்து பாருங்கள் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்களை உங்கள் கேமிரா கண்ணால் அள்ளிக்கொண்டு செல்லுங்கள் என்று கொஞ்சம் வம்புடனும்,நிறைய அன்புடனும் அழைத்தார்.
அவரது அழைப்பை ஏற்று சென்றேன். அடுக்கடுக்கான கைபேசி அழைப்புகள் தவத்திற்கு வந்து கொண்டே இருந்தது, ஆனால் கொஞ்சம் அதற்கு முக்கியத்துவம் தராமல் என்னை அழைத்துச் சென்ற நோக்கம் சிந்தாமல் சிதறாமல் பார்த்துக்கொண்டார்.நேரம் இல்லை ஆகவே நிறைய இடங்களை பார்க்க முடியவில்லை.கிடைத்த நேரத்தில் பார்த்ததில் வியப்பும் பிரமிப்பும் ஏற்படுத்தியது பஞ்சபாண்டவர் மலை எனப்படும் கிழவளவு கிராமத்து சமணர் மலை சிலைகள்தான்.
மதுரையில் இருந்து 47 கிலோமீட்டர் துாரத்தில் மேலுார் தாண்டி திருப்பத்துார் போகும் வழியில் இருக்கிறது பஞ்சபாண்டவர் மலை. மலையில் ஏறிய சிறிது தூரத்தில் சமணர்கள் வாழ்ந்த இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் உள்ள பாறையின் முன்புறத்தில் 3 சமண சிற்பங்கள் உள்ளன. அதன்முன் இரு தூண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, பாறையின் கிழக்கு பகுதியில் 6 சிற்பங்கள் உள்ளன. மேலும், பாறையின் அடிப்பகுதியில் சுமார் 50 சமண படுக்கைகள் உள்ளன. மதுரையை சுற்றியுள்ள சமண மலைகளில் அதிகமான படுக்கைகள் உள்ள இடம் இதுவாகத்தான் இருக்கும். இந்த இடத்தில் 100 பேர் வரை தங்கலாம். தங்கியிருக்கும் இடங்களில் மழைநீர் புகாத வகையில் காடி எனப்படும் சிறிய அளவிலான வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன. பாறையின் மேல்பகுதியிலும் தண்ணீர் செல்வதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பாறையில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி வகையைச் சார்ந்தவை. இவை வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. பாறையில் உபாசன் தொண்டிலன் கொடு(ப்பி)ட்ட பாளி என்று எழுதப்பட்டுள்ளது. தொண்டியை சேர்ந்த உபாசன் என்பவர் சமணர்கள் தங்குவதற்கான படுக்கைகள் செய்து கொடுத்துள்ளார் என்பதை இந்த எழுத்துக்கள் குறிக்கின்றன.
நீண்ட மலைகுன்றுகள், மிகப்பெரிய உருண்டை வடிவ பாறைகள், ஒரு சிறுபாறை பெரிய ஒரு பாறையை உருண்டோடி விடாமல் தடுத்து தாங்கி நிற்ப்பது, நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களைப் போலான பாறைகள்,குகைகள்,அடுக்குபாறைகள் என சுற்றிபார்க்கும் போது பஞ்சபாண்டவர் மலை ஒரு தனி அழகோடு ஒரு தனி அமைதியோடு ஒரு தனி கம்பீரத்தோடு பல நுாற்றாண்டு சரித்திரத்தையே தன்னகத்தே கொண்டபடி இருந்தது. மலைக்குத் தென்புறம் உள்ள மலை முகட்டிற்க்கு சென்று பார்த்தால் ஒரு புறம் பசுமையாகவும், மறுபுறம் நெஞ்சைப் பிளக்கும் காட்சியாக மலைகள் அனைத்தும் கிரானைட் கற்களாக, கிரானைட் குவியலின் மைதானமாக காட்சியளித்தது. தூரத்தில் ஒரு மலை, உச்சியிலிருந்து வகிடு எடுத்தது போல் வெட்டப்பட்டிருந்தது.ரொட்டித்துண்டுகள் போல மலை வெட்டப்பட்டு கிட்டத்தட்ட மொட்டையடிக்கப்பட்டு இருந்தது. பார்க்க பார்க்க இதயத்தை கத்தி கொண்டு அறுப்பது போல மனம் ரணமாக வலித்தது.கிட்டத்தட்ட அழிந்து போன அந்த மலையைப் போல இந்த பஞ்சபாண்டவர் மலையும் அழியாது என்பதற்கு என்ன உத்திரவாதம்.பழம் பெருமையை காக்கவேண்டும் பாட்டன் பூட்டன் பாதுகாத்த பொக்கிஷங்களை நமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்ற அக்கறையுடன் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சுடுகாட்டில் கட்டில் போட்டு படுத்தாரே அந்த அக்கறை இப்போது எத்தனை பேருக்கு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு போடப்பட்ட பாட்டில்களின் சொச்சங்களையும்,பான்பராக்கின் எச்சங்களையும் பார்க்கும் போது இந்த பொக்கிஷங்களின் மீது நம்மவர்களுக்கு இருக்கும் அக்கறையை நினைத்து கண்ணீர்தான் வருகிறது.
காலத்தில் மீதமிருக்கும் இது போன்ற சில இடங்கள் தான் சரித்திரம் உண்மையென மெய்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன.எல்லவாற்றையும் வணிக நோக்கில் பார்க்கும் போதாத காலமிது, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இது போன்ற மலைகளை காப்பாற்றி வைத்திருக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. ஒரு கல் சிலையாகும் போது, அது மனிதனின் கலைநுட்பத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், அதே சிலை உடைக்கப்பட்டுத் திரும்பவும் கல் ஆகும் போது, அது தனிமனிதனின் வீழ்ச்சியை மட்டுமல்ல, சமூகத்தின் சரித்திரத்திதன் வீழ்ச்சியைக் குறிப்பதாகவே அமையும் என்பார்கள்... தொட்டுவிடும் துாரத்தில் இருக்கும் சமணர்களின் புடைப்பு சிற்பங்களுக்கு அந்த நிலை வந்துவிடுமோ? என நொந்து உள்ளத்தோடு கேள்விகள் மட்டுமே கேட்கமுடிகிறது.
-எல்.முருகராஜ்