மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூன் 20ல் ஆனி முப்பழ அபிஷேகம்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூன் 20ல் ஆனி முப்பழ அபிஷேகம் உச்சிகால வேளையில் நடக்கிறது. கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வது ஐதீகம். இதன்படி மீனாட்சி அம்மன் கோயில் மூலஸ்தான சொக்கநாதப் பெருமானுக்கு ஜூன் 20ல் பவுர்ணமியன்று உச்சிகால வேளையான காலை 11.00 மணிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடக்கிறது. இப்பூஜைகளை ஏற்றுக்கொண்ட இறைவன், இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் பசி தீர அருள்பாலிப்பதாக ஐதீகம். முப்பழ அபிஷேக பூஜையன்று நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும். ஜூலை 8 ல் மாணிக்கவாசகர் திருநட்சத்திரம் அன்றும், ஜூன் 20ல் அருணகிரிநாதர் ஜெயந்தி அன்றும் இரவு 8.00 மணிக்கு நான்கு ஆவணி மூல வீதி புறப்பாடு நடக்கிறது. எனவே ஜூலை 10 வரை கோயில் மற்றும் உபயதாரர் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா பதிவு செய்து நடத்திட இயலாது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செய்து வருகின்றனர்.