திருவோண பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியது கன்னியாகுமரி
கன்னியாகுமரி : திருஓண பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் நேற்றுகேரள சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.இதனால் கன்னியாகுமரி களைகட்டியது.திருஓண பண்டிகை நேற்று குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சகோதரத்துவ உணர்வை பிரதிபலிக்கும் இப்பண்டிகையை கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் மலையாளமொழி அதிகம் பேசும் குமரி மாவட்டத்திலும் இப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.உலகமெங்கும் இருக்கும் கேரள மக்கள் இப்பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தனர். ஓண பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் நேற்று கேரள சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது. முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, பகவதியம்மன் கோயில், சுவாமி விவேகானந்தர் மண்டபம்,திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்: விவேகானந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலான சாலையின் இருபகுதியிலும் சுற்றுலாபயணிகள் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.மேலும் கடற்கரைசாலை, சன்னதிதெரு,ரதவீதி போன்ற இடங்களில் உள்ள லாட்ஜ்களில் பார்க்கிங் வசதி குறைவாக இருப்பதால் லாட்ஜ்க்கு வரும் வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.