சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் பெரும் இழப்பு!
சபரிமலை: ஆசாரங்களை மீறி, சபரிமலையில் பெண்களை அனுமதித்தால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும், என, திருவிதாங்கூர் மகாராணி கூறினார். சபரிமலையில், பிரதிஷ்டை தின பூஜைகள் மற்றும் ஆனி மாத பூஜைகள் கடந்த, 13-ம் தேதி முதல், நேற்று இரவு வரை நடந்தன. நேற்று முன்தினம், திருவிதாங்கூர் மகாராணி, அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய், சபரிமலை வந்து தரிசனம் செய்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சபரிமலை அய்யப்பன் நித்ய பிரம்மச்சாரி. எனவே, இங்கு தரிசனம் நடத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. காலம் காலமாக பல ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அய்யப்பனின் அவதார வரலாறு தெரியாத சிலர், அனைவரும் இங்கு தரிசனம் செய்யலாம் என, கூறி வருகின்றனர்.பல காரணங்களுக்காக, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள், சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாது. இதை மாற்றினால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும். சமீபத்தில், 19 வயது பெண், மாறு வேடத்தில், தரிசனத்துக்கு வந்தது கவலை தருகிறது. இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். ஆனி மாத பூஜைகளுக்கு பின், சபரி மலை நடை நேற்று இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்பட்டது. அடுத்து, ஆடி மாத பூஜைகளுக்காக ஆக., 15-ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.