உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் முக்கனி பூஜை

திருப்பரங்குன்றம் கோயிலில் முக்கனி பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நிறைவாக நேற்று சுவாமிகளுக்கு முக்கனி பூஜை நடந்தது. கோயிலில் ஜூன் 10ல் துவங்கிய திருவிழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று, திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடந்தது. நேற்று உச்சிகால பூஜையில், மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மா, பலா, வாழை முக்கனிகள் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் சுவாமி யானை மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்து சுவாமி சிம்மாசனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !