பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படும் முறை: புதுகையில் கிடைத்தது அரிய சான்று!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட, வரைவு செங்கோடுகள் மற்றும் வரைவு எழுத்துகள் அடங்கிய அரிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனரும், ஆசிரியருமான மணிகண்டன் கூறியதாவது: உலகின் பாரம்பரிய வரலாற்று உண்மைகளை, தற்கால மக்கள் அறியும் வகையில், குகைகளில் வரையப்பட்ட செங்கோட்டு ஓவியங்களும், ஓலைச்சுவடிகளும், களிமண் உருவங்களும், புடைப்பு சிற்பங்களும் சான்றுகளாக அமைந்து உள்ளன.
முக்கிய ஆவணங்களாக... : கல்வெட்டுகள், பல்வேறு வரலாற்று உண்மைகளை நமக்கு தெரியப்படுத்தும் முக்கிய ஆவணமாக இருந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில், பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட, வரைவு செங்கோட்டு எழுத்துகள் அடங்கிய அரிய சான்றுகள், நொடியூர் சிவன் கோவில், நார்த்தாமலை கடம்பர் கோவில், திருவிடையாப்பட்டி சிவன் கோவில்களில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், ஒரே கோவிலில், வெவ்வேறு மன்னர்களின் கல்வெட்டுகளை காண முடிகிறது.நொடியூரில், மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டும், பித்தி எனும் சுவர் பகுதிகளில் மாறவர்மன் குலசேகரத்தேவன் கல்வெட்டுகளோடு, காவி மூலம் செங்கோட்டு எழுத்துகளை முன்வரைவு செய்து உள்ளனர்.
13ம் நூற்றாண்டின்...: இதே போல், நார்த்தாமலை கடம்பர் கோவில், திருவிடையாப்பட்டி சிவன் கோவில்களில், குறுக்கு கோடுகள் மட்டும் போடப்பட்டு, அதனுள் கல்வெட்டு பொறிக்கப்பட வேண்டிய முன் வரைவு எழுத்துகள் காவியை பயன் படுத்தி, எழுதப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 13ம் நுாற்றாண்டின் இறுதியில் முன்வரைவு செய்யப்பட்டு, இதுநாள் வரை, பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில், ஆங்காங்கே அழிந்து மறைந்த நிலையில் இருந்தாலும், மிக நுட்பமான காவிக்கோடுகள் உள்ளிட்டவையுடன் தெளிவாக கிடைத்து உள்ளன. காவியை பயன்படுத்தி எழுதப்பட்ட இந்த எழுத்துருக்கள், கல்வெட்டியல் வரலாற்றின் மிக அரிய ஆவணமாக உள்ளதோடு, பல்வேறு தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு, அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.