திருப்பதியில் அன்னபிரசாதம் திட்டம்
காஞ்சிபுரம் : ""திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்படும் அன்னதானம் திட்டத்தை, "அன்னபிரசாதம் திட்டமாக, மாற்றுவது குறித்து, ஆலோசிக்க உள்ளோம், என, திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பாப்பிராஜு தெரிவித்தார்.நேற்று அவர் காஞ்சிபுரம் வந்தார். சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, தினமும் 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் பக்தர்கள் வரை வருகின்றனர். பக்தர்கள் இணையதளம் வசதியைப் பயன்படுத்தி, விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்படும், அன்னதானம் திட்டத்தில் குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் பயன் பெறுகின்றனர். அனைவரும் பயன்பெறும் வகையில், அந்தத் திட்டத்தை, "அன்னபிரசாதம் திட்டமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இத்திட்டம் தேவஸ்தான நிர்வாக உறுப்பினர்களை கலந்தாலோசித்த பின், செயல்படுத்தப்படும். இவ்வாறு பாப்பிராஜு தெரிவித்தார்.