அண்ணன்மார் சுவாமி கதைப்பாட்டு நிகழ்ச்சி
அவிநாசி: அவிநாசி அருகே நடைபெற்று வந்த, அண்ணன்மார் சுவாமி கதைப்பாட்டு நிகழ்ச்சி, நிறைவுற்றது. தண்டுக்காரன்பாளையம் பொன்னர் சங்கர் வழிபாட்டு மன்றம் சார்பில், அண்ணன்மார் சுவாமி கதைப்பாட்டு நிகழ்ச்சி, மே, 6ல் துவங்கியது. பிரம்மகிரி அம்மன் கோவில் வளாகத்தில், 40 நாட்கள் நடைபெற்ற கதைப்பாட்டு நிகழ்ச்சி, நிறைவுற்றது. நிறைவு நாளில், வேடுபரி, அண்ணன்மார் சுவாமி படுகளம், பட்டாபிஷேகம் நடைபெற்றது. குதிரை, காளை மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வாணவேடிக்கையுடன், பட்டா பிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு துவங்கிய கதைப்பாட்டு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நிறைவுற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்திய உடுமலை சீதாராமன், சிவா ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். தண்டுக்காரன்பாளையம், சேவூர், கருவலூர், தெக்கலூர் பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.