தி.மலை கோவிலில் இயங்காத பேட்டரி காரால் முதியோர் அவதி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இயங்கி வந்த பேட்டரி கார், கடந்த, மூன்று மாதமாக செயல்படாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் முதியோர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முதியோர் வசதிக்காக, பேட்டரி கார் இயக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பேட்டரி கார் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேட்டரி காரில், கோவில் கிழக்கு கோபுரமான ராஜகோபுரம் முன்பிருந்து, ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களை ஏற்றி கொண்டு, அன்னதான மண்டபம் வழியாக திருமஞ்சன கோபுரம் வழியாக சென்று, மேற்கு கோபுர வாயில் படியாக உள்ள கோவில் கொடிமரம் வரை அழைத்து செல்லப்படும். அங்கு சுவாமி, அம்மன் தரிசனம் முடிந்த பிறகு, மீண்டும் நந்தவனம் வழியாக தெற்கு கோபுரம் வழியாக சென்று, ராஜகோபுர வாயிலில் அழைத்து வந்து விடப்படும். இதனால் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக இருந்தது. இந்த பேட்டரி கார் அடிக்கடி பழுதானதால், அவ்வப்போது சரி செய்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பேட்டரி கார் முற்றிலும் பழுதாகி, ?ஷட்டில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. இதை சரி செய்ய இதுவரை கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதியோர் மற்றும் ஊனமுற்றோர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.