மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில் நிகும்பலா யாகம்
புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில், ஆனி மாத அமாவாசையான நேற்று, உலக நன்மை வேண்டி நிகும்பலா யாகம் நடந்தது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 72 அடி உயர மகா பிரத்தியங்கிரா காளி கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் பங்கேற்று அம்பாளை தரிசித்தால் சகல நன்மைகள் கிடைக்கும், எதிரிகள் தொந்தரவு நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், ஆனி மாத அமாவாசை தினமான நேற்று, நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. அதையொட்டி, காலை 9.00 மணிக்கு பிரத்தியங்கிரா காளிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 1008 எலுமிச்சை பழங்கள் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை தொடங்கி யது. பகல் 1:00 மணிக்கு கோவில் குருக்கள் நடாதுார் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில், வேத மந்திரங்கள் ஓத, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல், இனிப்பு, காய்கறிகள், பழங்கள் கொட்டி யாகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.