ஆகஸ்ட் 2 ல் குரு பெயர்ச்சி: ஆலங்குடியில் முதல் கட்ட லட்சார்ச்சனை 21ம் தேதி துவக்கம்!
ஆலங்குடி: ஆலங்குடி குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சிக்கு முன் முதல் கட்ட லட்ச அர்ச்சனை வரும் 21 ம் தேதி துவங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது.
குருபகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 2 ம் தேதி பிரவேசம் செய்வதை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலகளில் ஒ ன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு, குருபெயர்ச்சியை முன்னிட்டு இரு முறை லட்ச அர்ச்சனை நடத்தப்படுகிறது. இதில் பரிகார ராசியினர்கள் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்வது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்ப ராசியினர் லட்ச அர்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்வது உத்தமம் என்பதால் இந்த ராசியினர்கள் குரு பெயர்ச்சிக்கு முன் இம்மாதம் 21 ம் தேதியில் இருந்து 28 ம் தேதி வரை காலை 9.00 மணியில் இருந்து பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.30 மணியில் இருந்து இரவு 8.00 மணி வரை நடக்கும் லட்ச அர்ச்சனையில் நேரில் பங்கேற்கலாம். நேரில் பங்கேற்க முடியாத பரிகார ராசியினர் தங்கள் பற்றிய விபரங்களுடன் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்ப கோணத்தில் மாற்ற தக்க வகையில் ரூ.400 டி.டி., எடுத்து செயல் அலுவலர் அருள்மிகு ஆபத்சாகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி 6128 001 வலங்கைமான் தாலுகா திருவாரூர் மாவட்டம் என்ற பெயருக்கு அஞ்சல் மூலம் அனுப்பி,. 4 கிராம் குருபகவான் வெள்ளி டாலருடன் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். எம்.ஓ., செலுத்தலாம். பக்தர்கள் கட்டாயம் கூரியரியரில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். குருபெயர்ச்சிக்குப்பின் இரண்டாவது கட்டமாக லட்ச அர்ச்சனை ஆகஸ்ட் 4 ம் தேதியில் இருந்து 11 ம் தேதி வரை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 04374–269407 மற்றும் 9787273012 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.