வரலாறு காக்கும் கோவில்கள் !
உடுமலை: ஒவ்வொரு பகுதியின் வரலாற்றையும், மக்களின் வாழ்வியலையும், பாதுகாத்து வந்த பழங்கால கோவில்கள், பராமரிப்பில்லாமல், பரிதாப நிலைக்கு செல்வதும், அதை புனரமைக்க, கிராம மக்கள், போராடுவதும் தொடர்கதையாகவே உள்ளது. பல போராட்டங்களை சந்தித்தாலும், பழங்கால கோவிலை புனரமைத்து, வரலாற்றை பாதுகாத்துள்ளனர் கரட்டுமடம் கிராம மக்கள். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருடன் இணையாமல், தனித்திருக்கும் சிறிய மலைக்குன்றுகள் அனைத்துக்கும் வரலாற்று சிறப்புகள் உள்ளன. இதற்கு உதாரணமாக, கல்லாபுரம் துருவமலை போன்று, கரட்டுமடம் மலையும் தனிச்சிறப்பு பெறுகிறது. கரட்டுமடம், ராவணாபுரம், தேவனுார்புதுார், எரிசனம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் எங்கிருந்து பார்த்தாலும், காணக்கிடைப்பது மலைக்குன்றில் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள், அனுமந்தராய சுவாமி கோவில்களாகும். கிராம மக்களுக்கு, காலை கண்விழிக்கும் போதே, தென்படும் கோவிலின் நிலையை பார்த்து, வருந்தாத, நாட்களே இல்லை.
தனிச்சிறப்பு: சிறிய மலைக்குன்றின் அமைந்துள்ள இந்த கோவில், கற்றளியாக கட்டப்பட்டு, விஜயநகர பேரரசு காலத்தில், கோபுரம் கட்டப்பட்டு, சிறப்புடன் திகழ்ந்துள்ளது. பின்னர், தளி பாளையக்காரர் எத்தலப்பரால், பல்வேறு புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிய குன்றாக இருந்தாலும், கோவிலின் பின்புறம் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். சிறிய சுனை போன்ற அமைப்பும் இருந்துள்ளது. மலைக்குன்றை சுற்றியும் அகழி வெட்டியது போல, பெரிய குழிகள் அமைந்துள்ளன. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இதர காரணங்களால், பராமரிப்பு குறைந்து, பரிதாப நிலைக்கு சென்றது சஞ்சீவிராய பெருமாள் மற்றும் அனுமந்தராய சுவாமி கோவில். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சினிமா படப்பிடிப்புகளும், கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டன. இருப்பினும், கோவிலை புனரமைத்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பது சுற்றுப்பகுதியை சேர்ந்த, 75க்கும் அதிகமான கிராம மக்களின் தவமாக இருந்தது.
இதற்கு, குறிப்பிட்ட நாட்களில், கிராமத்திலிருந்து மலைக்கு, சப்பர ஊர்வலம் நடத்திய இளைஞர்கள், அடித்தளமிட்டனர். பின்னர், கோவில் பெயரில் திருக்கோவில் அறப்பணி மன்றம் உருவாக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்தன. கோவில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான கிராம மக்களின் கனவு, இன்று காலை, ௬:00 மணிக்கு நடக்கும் கும்பாபிேஷகத்தால், நனவாகிறது.