உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 23 ஆண்டுகளுக்கு பின்.. அவிநாசி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

23 ஆண்டுகளுக்கு பின்.. அவிநாசி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

அவிநாசி: அவிநாசியில், 23 ஆண்டுகளுக்கு பின், பெருமாள் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீபூமிநீளா நாயகி ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில், 1993ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், 2005ல் நடந்திருக்க வேண்டும். பல்வேறு தடங்கல் காரணமாக, திருப்பணி தாமதமாகியது. அதேபோல், ஆஞ்சநேயர் கோவிலிலும், ஆறு ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால ஹோமம் நடைபெற்றது. இரண்டு கோவில்களிலும், யந்திர ஸ்தாபனம், ரத்னந்யாஸம், அஷ்ட பந்தன மருந்து மாற்றுதல் ஆகியன நடைபெற்றன. கும்பாபிஷேக நிகழ்வையொட்டி, பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், காலை, 5:15 முதல், 6:15 மணிக்குள்ளும், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், காலை, 9:00 முதல், 10:15 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி, கோவில் அமைந்துள்ள கடை வீதியில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும். அவிநாசி பேரூராட்சி மற்றும் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும், உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் உள்பிரகாரம், நடை மண்டபம், மெயின் ரோடு, ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட, 20 இடங்களில், "சிசி டிவி கேமரா பொருத்தி, போலீசார் கண்காணித்து வருகின்றனர். இன்று காலை, 10:00 மணி முதல், அவிநாசி லிங்கேஸ்வரர் அன்னதான கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !