கமுதி அருகே ஆண்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு!
ADDED :5177 days ago
கமுதி:கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் கோயில் விழாவில் ஆண்கள் வினோத வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கமுதி அருகே உள்ளது செங்கப்படை கிராமம். இங்குள்ள அழகு வள்ளியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நேற்று நடந்தது. ஆண்கள் சாக்குப்பையும், காலில் சலங்கை அணிந்து, உடலை சுற்றி வைக்கோலை கட்டிக் கொண்டனர். முகத்தையும் முழுமையாக சாக்குப்பையால் மூடிவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க, உறவினர்கள் சாக்குப்பையின் மீது தண்ணீர் ஊற்றி விசிறியபடி இருந்தனர். பின்னர் பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியே கும்மி அடித்து முளைப்பாரியை சுற்றி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.