சபரிமலை அன்னதான திட்டத்தை செயல்படுத்த புதிய நிபந்தனைகள்!
சபரிமலை :சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் தனியார் அமைப்புகளுக்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால், இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் அய்யப்ப சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு மிக அதிகளவு தொகை தேவைப்படும் என்பதால், தர்மசங்கடத்தில் சிக்கி உள்ளன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில், பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. அடர்த்தியான வனத்தில், எந்தவொரு பொருளும் எளிதில் கிடைக்க முடியாத இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.இங்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தும் பல மடங்கு விலைகளில் விற்கப்படுவதால், ஏழை பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அவர்களுக்கு உணவு உட்பட பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலை இருந்து வந்தது. மேலும், அங்கு கிடைக்கும் உணவு வகைகள் தரமற்றதாக இருப்பதால் ஆரோக்கிய சீர்கேடும் ஏற்பட்டது.அவ்வாறு வரும் பக்தர்கள் சிரமமின்றி உணவருந்த வசதியாக, அய்யப்ப சேவா சங்கம், சென்னையைச் சேர்ந்த பரோபகார், பெங்களூரைச் சேர்ந்த அறக்கட்டளை என, பல தனியார் அமைப்புகள் இலவசமாக அன்னதானம் வழங்கி வருகின்றன. இதில், அய்யப்ப சேவா சங்கத்தினர் மண்டல மற்றும் மகரஜோதி உற்சவ காலங்களில் தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கி வருகிறது. இச்சங்கத்திற்கு கடந்தாண்டு மட்டும் அன்னதானம் வழங்க செலவிடப்பட்ட தொகை 1 கோடியே 25 லட்ச ரூபாய். இவ்வாறு பக்தர்களுக்கு சபரிமலையிலும், பம்பையிலும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில், அன்னதானம் நடத்தப்பட்டு வருகிறது. இது, பக்தர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.சபரிமலையில் அன்னதானம் வழங்கப்படும் கட்டடத்தை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஏற்கனவே தங்களிடம் திருப்பித் தருமாறு கூறிவிட்டது. இந்நிலையில், சபரிமலை மற்றும் பம்பை பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் தனியார் அமைப்புகளை, தேவஸ்வம் போர்டு அழைத்து ஆலோசனை நடத்தி, சில நிபந்தனைகளை விதித்துள்ளது.அதன்படி, இனி வரும் நாட்களில் சபரிமலை மற்றும் பம்பை பகுதிகளில் அன்னதானம் நடத்த விரும்பும் அமைப்புகள் முன்கூட்டியே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் பக்தர்கள் நல்வாழ்வு நிதிக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். சபரிமலை வளர்ச்சித் திட்டங்களுக்கு நன்கொடையாளர்களை அழைத்து வர வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.