அய்யலூர் கோயில் எறிகாசு ரூ.5.32 லட்சத்திற்கு ஏலம்
வடமதுரை: அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு ஏலம் ரூ.5.32 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்- திருச்சி நான்குவழிச்சாலையில் அய்யலுார்- தங்கம்மாபட்டி இடையே வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இவ்வழியே வாகனங்களின் பயணிப்போர், தங்கள் வாகனங்களில் இருந்தவாறே, சுவாமிக்கு காணிக்கையாக காசுகளை எறிந்து செல்கின்றனர். இந்த காசுகளை சேகரிப்பதற்காக இந்துசமய அறநிலைய துறை சார்பில் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது. இத்துடன் கோயிலுக்காக உடைக்கப்படும் சிதறு தேங்காய்களை சேகரிக்கவும், வாகனங்கள் பாதுகாப்பு உரிமத்திற்கும் தனித்தனி ஏலம் நடக்கிறது.
நாற்காலி உடைப்பு: கடந்த மாதம் தங்கம்மாபட்டியில் முதல் ஏலம் துவங்கியபோது கிராமமக்களில் சிலர், அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்யாமல் அலட்சியம் செய்வதாக கூறி, ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து திடீரென நாற்காலியை உடைத்து ரகளை செய்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களால் ஏலத்தை ஒத்திவைப்பதாக கூறி திரும்பி சென்றனர். எதிர்ப்பு பிரச்னையால் மறு ஏல நடவடிக்கைகளை தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வளாகத்திற்கு மாற்றினர். நேற்று அங்கு நடந்த ஏலத்தில் எறிகாசு சேகரிக்கும் உரிமம் ரூ.5.32 லட்சத்திற்கும், சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம் ரூ.1.37 லட்சத்திற்கும், வாகன பாதுகாப்பு உரிமம் ரூ.67 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.