உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் குடிகொண்ட சின்னநெகமம்: ஏழு கிராமங்களின் காவல் தெய்வம்!

மாரியம்மன் குடிகொண்ட சின்னநெகமம்: ஏழு கிராமங்களின் காவல் தெய்வம்!

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, 16 கிராம மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல, சின்ன நெகமம் கிராமத்தில் குடிகொண்டுள்ள மாரியம்மன் திருவிழா,7 கிராம மக்களால் கொண்டாடப்படுகிறது. பெரியநெகமம், ரங்கம்புதுார், காளியப்பம்பாளையம், சின்னேரிபாளையம், சின்னநெகமம், உதவிபாளையம் மற்றும் அய்யம்புதுார் கிராமங்களும் ஒரே நாளில் திருவிழா காண்கின்றன. பெரிய நெகமம் போல, சின்ன நெகமத்தில் நெசவுத்தொழில் இல்லை. தென்னை சாகுபடியே பிரதானம். மழையை நம்பிய மானாவாரி சாகுபடி பரப்பளவு குறைவு. இதில்,சோளம், தட்டைப்பயிறு சாகுபடியாகிறது. தேங்காய் வியாபாரம், மரம்ஏறுதல், தேங்காய் உரிப்பு மற்றும் மஞ்சிமில் தொழிலில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஏறக்குறைய, 35 சதவீதம் தொழிலாளர்கள், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு செல்கின்றனர்.

இளைஞர்கள் தாராபுரம், திருப்பூர் பகுதிகளில் உள்ள கம்பெனிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்கு ஏற்ப இவ்வழியாக தாராபுரம், திருப்பூருக்கு பஸ்கள் செல்கின்றன. ஏறக்குறைய, 590 ரேஷன்கார்டுகள் உள்ள இக்கிராமம், 450க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்டுள்ளது. கிராமத்து வீதிகள் அனைத்தும் கான்கிரீட் ரோடுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஊரின் முகப்பிலேயே கிராம நிர்வாக அலுவலகமும், பஞ்சாயத்து அலுவலகம் ஆகியன ஒரே காம்பவுண்டில் உள்ளன. இவ்விரு கட்டடங்களுக்கு இடையில், தெய்வ சிலைகள் உள்ளன. இக்கிராமத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் இல்லை. அருகிலேயே ரேஷன்கடை, துவக்கப்பள்ளி, அங்கன்வாடி ஆகியன உள்ளன. கிராமத்தின் காவல் தெய்வமாக,பழங்கால மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில், புனரமைக்கப்பட்டு ஆண்டுதோறும் விழா நடக்கிறது. அருகிலேயே பெருமாள் கோவிலும், விநாயகர் கோவிலும் உள்ளன.

பொதுக்கழிப்பிடம் மட்டுமல்ல, வீட்டுக்கொரு கழிப்பிட வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம சுகாதாரம் இங்கு பாதுகாக்கப்படுகிறது. ஊரை நெருங்கும் முன்பே, ரோட்டின் இருபுறமும் இரண்டு நீர் நிலைகள்(குட்டைகள்) வெட்டப்பட்டுள்ளன. ஆனாலும், குட்டைகளில் நீர் இல்லை. பாசனத்துக்கு மிக அருகிலேயே பி.ஏ.பி., பிரதான கால்வாய் செல்கிறது. இதனால், குடிநீர் பிரச்னை இல்லை. வாரத்துக்கு ஒருநாள் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீரும், மூன்றுநாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் போர்வெல் நீரும் வினியோகிக்கப்படுகிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் ஆரம்ப சுகாதார மையத்தின் கிளை, வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, சிலரது எதிர்ப்பால் கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். கிராமத்தின் எல்லைகளாக சின்னேரிபாளையம், உதவிபாளையம், பெரியநெகமம் கிராமங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !