45 ஆண்டுகளுக்கு பிறகு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே, 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த துரியோதனன் படுகள நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த, 24ம் தேதி முதல் அக்னி வசந்த விழா துவங்கியது. விழாவில், தினமும் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. பின்னர் கடந்த, 5ம் தேதி முதல் அர்ச்சுணன் வில்வளைப்பு, பகடை, துயில், அர்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது உள்ளிட்ட கட்டை கூத்து நாடகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 45 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை, 10 மணிக்கு, விழா திடலில் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்த துரியோதனன் உருவத்தின் முன், பீமன், துரியோதனன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் படுகள நாடகத்தை நடத்தினர். பின் நடந்த படுகள நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.